2020 ஏப்ரல் 21ம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதன்படி, இன்றைய தினம் 1041 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை ஒரே நாளில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்களாகும்.
அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி, செவ்வாய்க்கிழமை 830 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருந்த நிலையில், இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். மேலும் இன்றைய தினம் 62,322 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தற்போது வரையில் 2,836,801 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 4ம் திகதி நிலவரப்படி, பிரித்தானிய வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 30,000 ஐ கடந்துவிட்டது, இந்த எண்ணிக்கை இன்று 30,451ஐ எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 26,626 நோயாளிகளும், வேல்ஸில் 1,966 பேரும், ஸ்கொட்லாந்தில் 1,282 பேரும், வடக்கு அயர்லாந்தில் 577 பேரும் இவ்வாறு வைத்தியசாலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இவர்களில் 2,645 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.