தமிழகத்தில் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவனிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, அதே கத்தியால், அந்த நபரை கொலை செய்த இளம் பெண் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் முழு விபரம் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி. தாய்-தந்தையை இழந்த இவர் உறவினர் வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த பெண் சம்பவ தினத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற போது, அவரை அப்பகுதியைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜீத் என்பவர் கத்தி முனையில் மிரட்டி அவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றார்.
இதனால் கவுதமி தன்னை அவரிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள போராடினார். அப்போது அஜீத்தின் கையில் இருந்த கத்தியை பறித்த கவுதமி தன்னைக் காப்பாற்றி கொள்வதற்காக, கத்தியால் அவரை குத்தினார்.
அதன் பின், அவர் அங்கிருக்கும் சோழாவரம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். பொலிசார் தன்னிடம் அத்து மீறி நடக்க முயன்றதால், அஜீத்தை குத்தி கொலை செய்துவிட்டதாக கூறி, அந்த கத்தியையும், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
வழக்கமாக கொலை சம்பவம் நிகழ்ந்து விட்டால் பொலிசார் 302 வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கொலையாளியை கைது செய்வது வழக்கம்.
ஆனால் இந்த சம்பவத்தில் தன்னுடைய உயிரையை காப்பாற்றிக் கொள்வதற்காக இளம் பெண்ணால் நிகழ்த்தப்பட்ட கொலை சம்பவம் என்பதால் இதனை கொலையாக கருத இயலாது என்று அறிவித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், கவுதமியை கைது செய்யாமல் விடுவித்திருப்பதாக அறிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை மாற்றி தற்காப்புக்காக நடந்த கொலை சம்பவம் என்று இந்திய தண்டனை சட்டம் 100-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொண்ட கவுதமிக்காக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.