பூமியின் சுற்றளவு சராசரியாக 40,075 கி.மீ என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத் தொழில்நுட்பங்களைக் கொண்டு இதை அளந்தது பெரிய காரியம் இல்லை.
ஆனால், சுமார் 2,250 வருடங்களுக்கு முன்னர் ஓர் அறிஞர் பூமியின் சுற்றளவை ஏறத்தாழ சரியாகக் கணித்துச் சொன்னார்! அவர் பெயர் எரொடொஸ்தேனஸ்.
கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த அறிஞர் இவர். இவரால் எப்படி பூமியின் சுற்றளவைக் கணிக்க முடிந்தது?
ஒரு வருடத்தில் ஒரு நாளில் மட்டும் பகல் மிகவும் நீண்டதாக இருக்கும். ஆங்கிலத்தில் அந்த நாளை, சம்மர் சோல்ஸ்டைஸ் என்பர். தமிழில் ‘கோடை சந்தி’ என்று சொல்லப்படுகிறது. ஜூன் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் இது நிகழும்.
சியேன் என்ற எகிப்திய நகரம், அலெக்சாண்ட்ரியாவில் இருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் இருக்கிறது. அந்த நகரில் கோடை சந்தி அன்று நிகழ்ந்த அதிசயத்தைப் பற்றி, சியேனில் இருந்து அலெக்சாண்ட்ரியா வந்த வணிகர்கள் கூறியுள்ளனர்..
அன்றைய தினத்தில் உச்சி வெயில் நேரத்தில் நிழல் தரையில் விழவில்லையாம்; மேலும் நகரத்தின் ஆழமான கிணற்றின் அடி ஆழத்தில் இருந்த நீர், சூரிய ஒளியால் ஜொலித்ததாம். இதுதான் அந்த அதிசயம்.
எரொடொஸ்தேனஸ், சியேனில் அன்று சூரியக் கதிர்கள் நேர் செங்குத்தாக விழுந்ததால் இந்த அதிசயம் நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொண்டார். அதே நாளில், அலெக்ஸாண்ட்ரியாவின் உயரமான தூண் ஒன்று, மிகவும் குட்டையான நிழலை ஏற்படுத்தியதைக் கண்டார்.
ஆக அலெக்ஸாண்ட்ரியாவில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழவில்லை. தூணின் உயரத்தையும், அதன் நிழலின் உயரத்தையும் கொண்டு, அலெக்ஸாண்ட்ரியாவில் அன்று சூரியக் கதிர்கள் 7 டிகிரி சாய்வாக விழுந்ததைக் கணக்கிட்டார்.
இதில் இருந்து அலெக்ஸாண்ட்ரியாவும், சியேனும் பூமியின் மையப்புள்ளியில் இருந்து 7 டிகிரி கோணத்தில் விலகி இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.
ஒரு வட்டத்தின் மொத்த கோணமான 360 டிகிரியில், 7 டிகிரி என்பது 50இல் ஒரு பங்கு. இரண்டு நகரங்களுக்கும் இடைப்பட்ட தூரம் 800 கி.மீ எனில், பூமியின் மொத்த சுற்றளவு 800 கி.மீ x 50 = 40,000 கி.மீ. ஏறத்தாழ துல்லியமான மதிப்பீடு இது!
உலகின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இது இன்றளவிலும் காருதப்படுகிறது.



















