தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுகொண்டுள்ளார்.
நேற்று (09)அன்று தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஜெனிவா விடயத்தை ஒருமித்த கருத்துடன் எப்படி எதிர் கொள்வது எனும் மூன்றாவது கலந்துரையாடலின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இனப்படுகொலைக்கு நீதி சர்வதேசத்திடம் நீதி கோருவது என்ற விடயத்தை ஏற்றுகொண்டுள்ளார் என கூட்டத்தில் கலந்துகொண்ட தரப்பினர்
தெரிவித்துள்ளனர்.
இதுவரை காலமும் Genocide என்பதனை ஏற்க மறுத்து 2009 இல் இடம்பெற்றமை
இனப்படுகொலை அல்ல என கூறி வந்த பாராளுமன்ற உறுப்பினர் நேற்றைய
கூட்டத்தின் போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், வடகிழக்கு சிவில்
சமூகத்தினர், கருத்தியலாளர்கள், மதகுருக்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள்
கலந்துகொண்ட கூட்டத்தில் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரல் விடயத்தை
அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சமந்திரனும் அதனை ஏற்றுக்கொண்டு பின்வரும் தீர்மானத்தையும் ஏற்றுக்கொண்டனர்.
பொறுப்பு கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு செல்லல், ஐநா முன்மொழியக்
கூடிய எந்த விசாரணை பொறிமுறையும் அதாவது அனைத்துலக பொறிமுறை (3IM) ஒரு கால எல்லைக்குள் இருக்க வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரல் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணியினால் நான்கு விடயங்கள் உள்ளடக்கப்பட்ட திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், இலங்கைக்கான சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறை, வடக்கு கிழக்கிற்கான ஐ.நா மேற்பார்வையில் பொதுசன வாக்கெடுப்பு, நீதிக்கான சர்வதேச பொறிமுறை என்பனவே அவை.
இதில் முதலாவதாக குறிப்பிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் என்பதை மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்றுக்கொண்டன. ஒரு வருட கால அவகாசத்துடன் இதை ஏற்றுக்கொள்ள நீண்ட விவாதத்தின் பின்னர் இரு தரப்பும் இணங்கின.
முன்னணியும், கூட்டமைப்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பதில் விடாப்பிடியாக நின்றன. இந்த ஒரேயொரு திட்டத்துடன் அணுக முடியாது, அது சாத்தியமில்லா விட்டால் மாற்று திட்டமும் தேவையென்பது தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு.
இந்த விவாதங்களின் போது, இனப்படுகொலையென்பதை முன்னணி வலியுறுத்தவில்லையென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
ஜெனீவாவுக்கு சமர்பிக்கவுள்ள வரைபு தொடர்பில் இறுதி
செய்யப்பட்டு பின்னர் அது ஊடகங்களுக்கு வழங்கப்படும் எனவும் காரசாரமான
கருத்து முரண்பாடுகளுக்கு தொடர்ந்து, மீண்டும் கூட அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்தன.