பிரித்தானியாவில் பரவி வரும் வீரியம் கூடிய வைரஸ் தொடர்பில் தகவல் தெரிந்தவுடன் பிரித்தானியாவிலிருந்து இங்கு வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்தினோம் என ஆரம்ப சுகாதார சேவைகள் ,தொற்றுநோய் மற்றும் கொவிட்19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரான டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
பிரித்தானியா ஊடாக வரும் விமானப் பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சமூகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கடுமையான சுகாதார விதிகளை நாம் பின்பற்றவுள்ளோம்.மேலும் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு முழுதாக திறந்து விடப்படவில்லை. சுற்றுலாத்துறை மூலம் எமது நாட்டில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வருமானம் பெறுகிறார்கள்.
இவர்களின் பொருளாதாரம் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சுற்றுலாத் துறை மூலம் நாட்டிற்கு அதிக அளவு வருமானம் கிடைக்கும். சின்னமுத்து, போலியோ போன்ற நோய்கள் உலகில் முற்றாக அழிக்கப்பட்டது போல் கொரோனாவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் அதனை இன்றோ நாளையோ செய்ய முடியாது. அதற்காக நாட்டை மூடி வைத்திருக்கவும் முடியாது. கொரோனா கட்டுப்படுத்தப்படும் வேளையில் சுற்றுலாத் துறை, ஆடை உற்பத்தித் துறை என்பவற்றையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
உல்லாசப் பயணிகள் இங்கு வருவதற்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனையை செய்த பின்னரே வந்துள்ளார்கள்.
அவ்வாறு வந்தவர்களிடையே மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்த போது சில தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். அவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பியுள்ளோம்.
இவர்களுடன் இலங்கை மக்கள் பழக முடியாது. சுகாதார வழிகாட்டல்களை சரியாகக் கடைப்பிடித்து வருகின்றோம்.
ஆரம்பக் கட்டத்தில் சில குறைகள் இருக்கலாம். அவற்றை நாம் நிவர்த்தி செய்து சுற்றுலாத் துறையை பாதிப்படையாமல் செய்ய நடவடிக்கை எடுப்போம். என்றார்.


















