இந்தியாவின் கேரள மாநிலத்தில் அரசின் பாதுகாப்பில் இருந்து குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்ட கூட்டு துஸ்பிரயோகத்திற்கு இலக்கான சிறுமி மூன்றாவது முறையும் பலாத்காரத்திற்கு இலக்கானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 6 மாதங்களில் குறித்த சிறுமியை மொத்தம் 29 பேர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக வாக்குமூலத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஹேமலதா தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு,
இந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2016 ம் ஆண்டு 13 வயதான சிறுமி, பலாத்காரத்திற்கு இலக்கான நிலையில், அப்போது அவரை மீட்டு அரசு சார்பில் சிறார்களுக்கான இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.
இதனையடுத்து குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று, ஆவரை பெற்றோருடன் அனுப்பி வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால் குறித்த சிறுமி மீண்டும் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான நிலையில், 2017 ஆகஸ்டு மாதம் மஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள நிர்பயா இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
மீண்டும், தாயார் மற்றும் சகோதரரின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு துவக்கத்தில், சிறுமியை குடும்பத்தாருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 2 நாட்கள் சிறுமி மாயமான நிலையில், பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், மீண்டும் அவர் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான தகவல் வெளியானது.
சக மாணவர்கள் உட்பட 29 பேர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மொபைல்போன் மூலம் சிறுமியுடன் ஆபாச சேட் செய்தவர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை 23 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.