மேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்ட பின்னர் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய பாடசாலை தவணைக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்விச் செயற்பாடுகள் வழமைப்போன்று இடம்பெற்று வருவதாக கல்விச் செயலாளர் தெரிவித்தார்.
மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து அதிபர்கள், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் இடையே இந்த மாத இறுதியில் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
இதன்போது எட்டப்படும் முடிவுகள் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படும்.
இறுதி பரிந்துரைகள் பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட சில பாடசாலைகள் மேற்கு மாகாணத்தில் மீண்டும் திறக்கப்படும்.
மேல் மாகாணத்தில் 11 வலயங்களில் 1,576 பாடசாலைகள் உள்ளன. இந்த பகுதிகளிலுள்ள 79,000 மாணவர்கள் மார்ச் மாதத்தில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ளனர்.
அதன்படி, மேல் மாகாணத்தில் 907 மாகாண பாடசாலைகளில் தரம் 11 மாணவர்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை முதல் நடைபெறும்.