கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை, கட்டாயம் தகனம் செய்யும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுளின் நான்கு விசேட நிபுணர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானமானது, மனித உரிமை மீறலுக்கு நிகரான விடயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பதன் ஊடாக, கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக, மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியே, இலங்கை அரசாங்கம் சடலங்களை தகனம் செய்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது
எனினும், சடலங்களை புதைப்பதன் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளதாக, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரை துன்புறுத்தும் நோக்கில், பாகுபாடு, அடக்குமுறை மற்றும் தேசியவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களின் சடலங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்காது, தகனம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சடலங்கள் தகனம் செய்யப்பப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை மக்கள் மீது பிரயோகிக்கப்படும் வெறுப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.