பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு தொற்று எண்ணிக்கையும், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகநாடுகளின் வரிசையில் பிரான்ஸ் அதன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 6வது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 7வது இடத்திலும் உள்ளது.
அந்நாட்டில் இதுவரை 3,057,857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 73,494 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 4,240 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, மற்றும் இறப்பு எண்ணிக்கை 445-ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், பிரான்சில் திங்கட்கிழமை வரை 1,092,958 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவீதத்தை கூட பூர்த்தி செய்யவில்லை.
அரசாங்கம் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திவரும் அதே வேளையில், மருத்துவ வல்லுநர்கள் பிரான்சில் மூன்றாவது பூட்டுதலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அத்தகைய நடவடிக்கையைத் தவிர்க்க முயற்சிப்பதாக தெரிவித்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் 16-ஆம் திகதிக்கு பிறகு முதல்முறையாக இவ்வாறு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.
அதேபோல், கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 3,000த்தை தாண்டியுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், உடனடியாக நாட்டில் 3வது தேசிய ஊரடங்கு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.