சீனாவின் தங்க சுரங்க விபத்தில் 10 தொழிலாளர்களை பூமிக்கு அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது.
இங்கு கடந்த 10ம் திகதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது.
இதில் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 பேர் பூமிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்ட போதிலும் விபத்து நடந்த 7 நாட்களுக்கு பிறகே பூமிக்கு அடியில் 2,000 அடி ஆழத்தில் சுரங்க தொழிலாளர்கள் 12 பேர் உயிருடன் இருக்கும் தகவல் மீட்பு குழுவுக்கு கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து மீட்புக்குழுவினரின் அயராத முயற்சியால் விபத்து நடந்த 14 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதேசமயம் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு தொழிலாளர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் எஞ்சிய 10 தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. 11 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்ட பின்னர் மாயமான 10 தொழிலாளர்களை தேடும் பணியை மீட்புக்குழு முடித்துவிட்டது.
அதன்படி நேற்று காலை மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் பெரிய துளை அமைத்து அதன் வழியாக பூமிக்கு அடியில் சென்று பார்த்தபோது, அங்கு மாயமான தொழிலாளர்கள் 10 பேரும் பிணமாக கிடப்பதை கண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் அந்த 10 உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.