உலக நாடுகள் பலவற்றிற்கு இந்தியா கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு, உலகத்துக்கு கிடைத்த சொத்து என்று புகழ்ந்துரைத்துள்ளார் ஐக்கிய நாடுகள் செயலரான Antonio Guterres.
இந்தியாவில், இந்திய தயாரிப்பான கொரோனா தடுப்பூசி அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருவதை அறிவேன் என்று கூறிய Guterres, அது தொடர்பாக நாம் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பிலிருக்கிறோம், உலகம் முழுமைக்குமான தடுப்பூசியை தயாரித்து வழங்கத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தியாவுக்கு கிடைக்கப்பெறும் என நாம் உறுதியாக நம்புகிறோம் என்றார் அவர்.
இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் திறன், இன்று உலகுக்கு கிடைத்துள்ள தலைசிறந்த சொத்து என நான் கருதுகிறேன். அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன் என்றார் Guterres.
இந்தியா, 55 இலட்சம் டோஸ் தடுப்பூசியை பல நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. அது ஓமான், CARICOM என்று அழைக்கப்படும் கரீபிய நாடுகள், நிகராகுவா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கு தடுப்பூசியை பரிசாக வழங்கவும் முடிவு செய்துள்ளது.
அத்துடன், இந்தியா ஒரு கோடி டோஸ் தடுப்பூசியை ஆப்பிரிக்காவுக்கும், 10 இலட்சம் டோஸ் தடுப்பூசியை ஐக்கிய நாடுகளின் சுகாதார பணியாளர்களுக்கும் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், வர்த்தக ரீதியாகவும், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.