கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டுக்கு தனது கண்டுபிடிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பு மருந்தை இலங்கை உற்பத்தி செய்வதற்கான தனது விருப்பத்தை ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கும் பட்சத்தில் இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 30 கோடி தடுப்பூசியை இந்திய ஆய்வகங்களில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் – ரஷ்யாவும் கடந்த ஆண்டு கையெழுத்திட்டன.
சீன மற்றும் ரஷ்யாவின் தடுப்பூசிகளின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டால் இலங்கையில் அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கீகாரம் அளித்துள்ளார்.
ஆனால், சீன மற்றும் ரஷ்யாவின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து 5 இலட்சம் தடுப்பூசிகள் கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு இந்தியாவால் இலவசமாக வழங்கப்பட்டன.
இதேவேளை, 3 இலட்சம் சினோபாம் (Sinopharm) தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் டாக்டர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
சினோபாம் தடுப்பூசிக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கினால், அவை நாட்டுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.
எது எப்படி இருப்பினும், இலங்கைக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை நாட்டிலேயே உற்பத்தி செய்ய அனுமதிப்பபதன் மூலம் குறைந்த செலவில் தடுப்பூசியைப் பெற முடியும் என்று கூறப்படுகின்றது.



















