நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அநாவசிய, வீம்புத்தனமான அரசியல் தலையீடுகளினால் யாழ்ப்பாணத்தில் நிர்வாகம் சீர்குலையும் அபாயம் எழுந்துள்ளது.
அனைத்து துறைகளிலும் நிர்வாக உயரதிகாரிகள் தனது சொல் பேச்சை கேட்பவர்களாக இருக்க வேண்டும்- தனது அரசியல் நியமனமாக இருக்க வேண்டுமென அவர் அடாவடியாக அதிகாரிகளை பந்தாடி வருவதால், நிர்வாக நடவடிக்கையில் இயல்பற்ற தன்மை உருவாகியுள்ளதாக மூத்த அதிகாரிகள் பலரும் விசனம் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
வடக்கில் இன்று இ.போ.ச பேருந்துகளின் வேலைநிறுத்தமும் இந்த அடாவடி அரசியலுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகிறது.
இ.போ.சவின் வடபிராந்திய முகாமையாளர்களாக நீண்டகாலமாக சிங்கள, முஸ்லிம் இனத்தவர்களே செயற்பட்டு வந்தனர். இதனால் ஊழியர்களின் மத்தியில் ஒருவித விரக்தி நிலை நீடித்தது. இ.போ.சவின் வடக்கு நியமனங்களில் வெளியிடத்தவர்களிற்கு வாய்ப்புக்கள் உருவாகி வந்தன.
இந்த நிலையில், வடக்கு முகாமையாளராக செ.குணபாலசெல்வன் நேற்று நியமிக்கப்பட்டு, அவருக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அந்த கடிதத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, அவரின் கையினாலும் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, வடக்கு இ.போ.சவிற்குள் கோத்தபாய தரப்பின் சிறிய தொழிற்சங்கமொன்றும் உள்ளது. அங்கஜன் இராமநாதனின் கட்டுப்பாட்டில் அது இயங்குகிறது.
புதிய முகாமையாளரை பதவியேற்க அனுமதிக்கவே மாட்டேன் என அங்கஜனால், கோட்டாவின் தொழிற்சங்கத்திடம் அடித்து கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய முகாமையாளர் இன்று நண்பகல் பதவியேற்கவிருந்த நிலையில், அவரது நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, வடமாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பில் இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய அங்கஜன் இராமநாதன் முயன்றதால் குழப்பம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தப்பது.


















