இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்ட காணொளிக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிக்கு குறித்த காணொளி தொடர்பாக அறிவித்துள்ளதாக பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
1 நிமிடம் 28 செக்கன்கள் கொண்ட குறித்த காணொளியை கடந்த வாரம் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ளது.
அதில் அடங்கும் விடயங்களை முழுமையாக மறுப்பதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த காணொளி மனித உரிமைகள் பேரவையின் நடைமுறைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாகக் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிக்கு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வு இந்த மாதம் 22ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் ஜெனீவாவில் கடந்த 27ம் திகதி ஒரு அறிக்கையை முன்வைத்திருந்தார்.
அந்த அறிக்கை மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்தியிருந்தார்.
அத்தகைய நபர்களின் சொத்துக்களை தடை செய்யவும், பயண தடைகளை விதிக்கவும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
எனினும் இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பதிலளித்துள்ளது.




















