இலங்கை தனது 73வது சுதந்திரதினத்தை இன்று கொண்டாடுகிறது. எனினும், இலங்கையின் பூர்வகுடிகளும், மக்கள் எண்ணிக்கையில் இரண்டாவது தொகையை கொண்டவர்களுமான தமிழ் மக்கள் இன்று சுதந்திரதினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
133 ஆண்டுகளாக மேலைத்தேய ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தபின், பெப்ரவரி 4, 1948 அன்று இலங்கையர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றனர். எனினும், அதன் பின், இலங்கைக்குள் இனங்களிற்குள் ஐக்கியம் ஏற்படவில்லை. சுதந்திரம் பெற்ற 8 ஆண்டுகளிலேயே எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மீது, எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்களவர்கள் மோசமான இனவன்முறையை ஆரம்பித்தனர்.
அன்று தொடக்கம் இன்றுவரை இலங்கையின் ஒரு பகுதியில் இன்றைய தினம் சுதந்திரதினமாகவும், மற்றைய பகுதியில் கரிநாளாகவும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும்.
COVID-19 சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளதால், சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிற விருந்தினர்கள் உட்பட வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
விழா முழுவதும் முகக்கவசம் அணிவதுடன் அனைத்து பங்கேற்பாளர்களும் தங்கள் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும்.
3,153 இராணுவ வீரர்கள், 821 கடற்படையினர், 740 விமானப்படையினர், 510 பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் 457 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
கொரோனா வைரஸ் கவலைகள் இருந்தபோதிலும், சுதந்திர தின அணிவகுப்பின் அணிவகுப்பில் பங்கேற்கும் துருப்புக்கள் முகமூடிகளை அணிய மாட்டார்கள். தேசிய கீதம் தனிச்சிங்களத்தில் மட்டுமே இசைக்கப்படும். தமிழ் மொழிக்கு இடமில்லையென அரசு அறிவித்து விட்டது.
மறுவளமாக, வடக்கு கிழக்கில் இன்றைய நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுகிறது.
புதிய ஆட்சியில் தமிழ் மக்களின் இன, மத அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்களில் ஐ.நா உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் இன்று தமிழ் மக்கள் இரண்டாவது நாளாகவும் திரண்டு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சி, மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தவுள்ளனர்.



















