ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து செய்து கொள்ளப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை இரத்து செய்ய இலங்கை எடுத்த முடிவு குறித்து ஜப்பானிய அரசு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா நேற்று (03) வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இந்த கூட்டத்தில் கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தம் தொடர்பான விடயம் எழுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.
கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமைந்துள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட மூன்று நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கடந்த 2019 மே 28 அன்று கொழும்பில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில்லையெனவும் அது துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்குமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துறைமுக அதிகாரசபை ஊழியர்களுடனான சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.