தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு சென்று சாதிக்க போவது எதுவுமேயில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் – இறுதி யுத்தத்தை தானே நடத்தி முடித்தேன் என்று பகிரங்கமாக அறிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கூடிக் குலவிய கூட்டமைப்பினர், உண்மைத் தன்மையை ஏன் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை?
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகளுக்கும், வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்று சரத் பொன்சேகாவை கேட்டிருந்தால் தெள்ளத்தெளிவாக விபரங்களைக் கூறியிருப்பார்.
நல்லாட்சி காலகட்டத்தில் நடந்த ஜெனீவா அமர்வில் இதனை எடுத்துக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையையும் எடுத்திருக்கலாம். இதனை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யவில்லை?
பிரதான எதிர்கட்சியாக இருந்தும், வரவு செலவுத் திட்டம் அனைத்துக்கும் ஆதரவு தெரிவித்த அவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் சம்பந்தமாக ஒரு நிபந்தனையை வைத்து ஏன் செயற்படவில்லை?
ஏதோ ஒரு காரணத்திற்காக நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பினர் சோரம் போய் விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
விடுதலைப் புலிகளை அழித்து, யுத்தத்தை முடித்து வைத்தது தானே என்று சரத்பொன்சேகா கூறிய பின்பும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவிற்கு வீடுவீடாக சென்று கூட்டமைப்பினர் வாக்குகளை சேகரித்து கொடுத்தார்கள்.
இதன் மூலம் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது சரி என்ற நிலைப்பாட்டில்தான் கூட்டமைப்பினர் இருந்துள்ளார்கள் என்பது விளங்குகிறது.
அதற்கு நன்றிக்கடனாகவே ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்துள்ளார்கள்.
அதுமட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அதிகளவு தமிழ் மக்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள்தான் என்று, அறிக்கைகளையும் வெளியிட்டு புலிகளையும் யுத்தக் குற்றத்திற்காக விசாரிக்க வேண்டும் எனக் கூறினார்.
இதன் மூலம் ஜெனீவாவிற்கு விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா நடத்திய யுத்தம் நியாயமானது என்ற ஒரு செய்தியையும் ஜெனீவாவிற்கு ஏற்கனவே கூட்டமைப்பினர் அறிவித்து விட்டார்கள்.
யுத்தம் நடத்தியது சரியானது, விடுதலைப் புலிகளைத்தான் முதலில் விசாரணை செய்ய வேண்டும் என்பதை ஜெனீவாவிற்கு கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
இதனை மக்கள் சரி என ஏற்றுக் கொண்டபடியால் தான் அவர்களுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.
ஜெனீவாவிற்கு வருடா வருடம் காவடி தூக்கும் நிகழ்வாக இதனை எடுத்துக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவர்களால் ஜெனீவாவிற்கு போய் நீதி கேட்க முடியாது. மனித உரிமை மீறல்கள் பற்றி எவரிடமும் பேச முடியாது.
ஆனால் 2014ஆம் ஆண்டு நான் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் போராளிகள், அவர்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் ஒரு அரசாங்கம் யுத்த மரபுகளை மீறிச் செயற்பட முடியாது என குறிப்பிட்டிருந்தேன்.
அவ்வாறு நான் சொன்னது தவறு என்பதால் தான் எனக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.
விடுதலைப் புலிகளையும் யுத்தக் குற்றத்திற்காக விசாரணை செய்ய வேண்டும் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி பெற வைத்து, மக்கள் எனது தவறை சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
கூட்டமைப்பினர் 2004ஆம் ஆண்டில் அனைத்து அடிப்படை மனித உரிமை மீறல்களையும் நடத்தி தேர்தல் ஜனநாயகத்திற்கு முற்று முழுதாக எதிராக செயற்பட்டு, வெற்றியை பெற்றுக் கொண்டவர்கள்.
இவர்கள் எவரிடமும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை எடுத்துக் கூறவும் முடியாது, தட்டிக் கேட்கவும் முடியாது.
2004ஆம் ஆண்டு தெரிவான எம்.பிக்கள் தான் இன்று வெவ்வேறு கட்சிகளில் இருந்து செயற்படுகின்றார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்கினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து செயற்பட்ட போது கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி,
யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து விட்டு, இன்று யுத்த இழப்பின் அனர்த்தங்களைப் பற்றிப் பேசி ஜெனீவா வரை எடுத்து செல்வதால் தமிழ் மக்களுக்கு எதுவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.
கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் இவ்வாறானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும் என்று நான் நம்பவில்லை.
ஆகையினால் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்க போவதில்லை என்றுள்ளது.



















