ஐ. நா மனித உரிமை பேரவையில் யுத்தக் குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க இம்முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஸ்ரீலங்கா தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை அடிப்படை தன்மையற்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் இடம் பெறவுள்ளது. ஸ்ரீலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள தரப்பினர் தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இம்முறை அதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான காரியாலயத்தில் முன்வைத்துள்ளோம்.
ஸ்ரீலங்காவிற்கு எதிராக தடை விதிக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது. பாதுகாப்பு சபையே நாடுகளுக்கு தடைவிதிக்கும். ஸ்ரீலங்காவிற்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் ஒருபோதும் செயற்படாது. பலம் கொண்ட நாடுகளை கொண்டு சிறிய நாடுகளை அச்சுறுத்துவது ஐக்கிய நாடுகள் சபை தோற்ற கொள்கைக்கு முரணானது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு ஒருதலைப்பட்சமானது. ஸ்ரீலங்காவில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் இதுவரை இடம்பெற்ற கூட்டத்தொடர்களில் பேசப்படவில்லை.
குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றதாக அனுமானிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்நிலைமை இம்முறை மாற்றியமைக்கப்படுவது அவசியமாகும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.