அமெரிக்காவின் அந்நிய பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து ஹவுதி இயக்கம் நீக்கப்படும் என ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி இயக்கத்தை அமெரிக்காவின் அந்நிய பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதாக ஜோ பைடன் நிர்வாகம் வெள்ளிக்கிழமை காங்கிரசிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜனவரி நடுப்பகுதியில், ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாகம், யேமன் நாட்டில் ஈரானால் ஆதரிக்கப்படும் ஹவுதி இயக்கத்தை “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு” என்று நியமிக்க அவசரமாக உத்தரவிட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களில் ஜோ பைடன் இந்த அரசாணையை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
ஜோ பைடனின் இந்த முடிவை ஐக்கிய நாடுகள் அவை வரவேற்றுள்ளது.
ஏனெனில், அப்பகுதியில் நடக்கும் யுத்தத்தினால் இதுவரை சுமார் 233,000 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் நீர், உணவு, மருந்து போன்ற உயிர்வாழத் தேவையான அடிப்படை உதவிகள் கூட இல்லாமல் இறந்தனர்.
இதில், ஹவுதி இயக்கம் பயங்கரவாத குழு என அறிவிக்கப்பட்டதால், அமெரிக்க சட்டத்தின்படி அவர்களுடன் பேச்சுவார்த்தையோ அல்லது ஒப்பந்தமோ செய்யமுடியாது. இதனால் அந்நாட்டு சாதாரண மக்களுக்கு எந்த அடிப்படை உதவிகளையும் எந்த அமைப்பும் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இப்போது, ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவு சுமார் 24 மில்லியன் ஏமன் மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்க்க அனுமதிக்கிறது.