நாளை பெங்களூரிலிருந்து தமிழகம் வர உள்ள சசிகலாவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வரும் சசிகலாவுக்கு கர்நாடக எல்லையில் இருந்து சென்னை வரை பல்வேறு இடங்களில் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சென்னைக்கு வந்த பிறகு சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று பின்னர், அதிமுக அலுவலகம் செல்ல உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக போலீசார் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி தயாநிதிமாறன், “நான் வீட்டில் இருந்து வரும் போது பார்க்கிறேன், வரும் வழி எங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு போட்டுள்ளது போல் இருக்கிறது.
அதிமுகவினர் யாருக்கு பயந்து இப்படி ஒரு ஏற்பட செய்துள்ளனர் என்று தெரியவில்லை. வரும் வழி எங்கும் தடுப்புகள் போட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர்” என்று தயாநிதி தெரிவித்தார்.
அப்போது தயாநிதியிடம், திமுக வின் பீ-டீம் தான் சசிகலா -தினகரன் என்று அதிமுக அமைச்சர்கள் சொல்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த தயாநிதி, “முதலில் அவர்கள் எந்த டீம் என்று சொல்ல சொல்லச்சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்.