நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களின் உரிமைகளை முடக்குவது தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் நோக்கமல்ல என தேசிய மரபுரிமைகள், கலை கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து அரசியல்வாதிகள் சிலர், இனவாதம் மற்றும் மதவாதம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.
அதில் எந்ததொரு உண்மையும் இல்லை. நாட்டின் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தொல்பொருள் அகழ்வராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் அனைத்து இன மக்களின் மரபுரிமைகளும் அனைத்து பகுதிகளிலும் மறைந்துள்ளன. அவற்றை பாதுகாப்பதே தேசிய மரபுரிமைகள் அமைச்சின் நோக்கமாகும்.
ஆகவே அரசியல் நோக்கங்களை கொண்டு தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு இனத்தின் மதம் மற்றும் கலை கலாச்சார மரபுரிமைகளை முடக்குவது தொல்பொருள் அகழ்வராய்ச்சியின் நோக்கமல்ல.
குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து தொல்பொருள் அகழ்வராய்ச்சி பணிகளை இடைநிறுத்த போவதில்லை.
வடக்கில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வராய்ச்சி பணிக்கு எதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்கள். அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாகவும் எம்மால் வெற்றிக் கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.