இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மீது இந்திய மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர், சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய போதே இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்து பேசும் பொழுது;
இலங்கை வாழ் நமது சகோதர சகோதரிகள் மீதும் அபிலாசைகள் மீதும் நமது அரசு எப்போதும் அக்கறை காட்டி வந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற கௌரவம் எனக்கு உண்டு.
வளர்ச்சிப் பணிகள் வாயிலாக நாங்கள் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நலன்களை உறுதி செய்து வருகின்றோம்.
கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட ஆதாரங்களை விட மிக அதிகளவில் இன்று நமது அரசாங்கம் தமிழர்களுக்கு அளித்து வருகிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50,000 வீடுகள், தோட்டப் பகுதிகளில் 4000 வீடுகள், சுகாதார விடயத்தில் நாம் ஒரு இலவச அவசரகால ஊர்தி சேவைக்கு நிதி வழங்கியிருக்கிறோம், இந்த சேவை இலங்கை தமிழ் சமுதாயத்தால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டிக்கோயாவில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டிருக்கிறது.
இணைப்பினை ஊக்கப்படுத்த யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் இடையேயான புகையிரத தடம் மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது.
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமானப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
விரைவிலேயே திறக்கப்படவிருக்கும் யாழ்ப்பாண கலாச்சார மையத்தை இந்தியா கட்டிக் கொடுத்திருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை தலைவர்ளிடம் நாங்கள் தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் தெடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்திருக்கின்றோம்.
சமத்துவம், நீதி, அமைதி, கன்னியம் ஆகியவற்றோடு வாழ்வதை உறுதி செய்வதில் நாம் கடைப்பட்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நம் மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினை நெடுங்காலமாக இருந்து வருகிறது. பிரச்சினையின் வரலாறுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
ஆனால் நம் மீனவர்களின் நியாயமான உரிமைகளை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என உறுதியளிக்கிறேன்.
இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் எப்போது கைது செய்யப்பட்டாலும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்துள்ளோம்.
எங்கள் ஆட்சிக்காலத்தில் 1600 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது இந்திய மீனவர்கள் யாரும் இலங்கைச் சிறைகளில் இல்லை.
அதேபோல 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளையும் விடுவிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்..