ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதனடிப்படையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அக்ஸ்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இந்தியாவினால் வழங்கப்பட்ட அக்ஸ்ரா செனெகா கொரோனா தடுப்பூசி கடந்த மாத இறுதி முதல் ஸ்ரீலங்காவில் வழங்கப்பட்டு வருகின்றது.
முதற்கட்டமாக வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நேற்று வரை ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 349 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்திலுள்ளவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் அதிக பணியாளர்கள் காணப்படும் பகுதிகள் மற்றும் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய வயதெல்லையில் உள்ளவர்களுக்கே முதல் கட்டத்தில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே நாளை முதல் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் ஸ்ரீலங்காவிற்கு கிடைக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக 9 மில்லியன் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவெக்ஸ் வசதியின் கீழ் வழங்கப்படுகின்ற தடுப்பூசிகள், முதலாவது கட்டம் மார்ச் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரம் கிடைக்கவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்காவில் 75 ஆயிரத்து 654 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். அத்துடன் 397 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




















