திருமணம் செய்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் காதலன் உயிரிழந்துள்ளார். காதலி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிமேய்க்கான்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித் (18). இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கூலிவேலைக்கு சென்றுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் சிவரஞ்சனி (19). இவர் கரூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆகையால் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
காரணம் சிவரஞ்சினியை விட அஜித்திற்கு வயது குறைவு என்பதால் சிவரஞ்சினிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய பெற்றோர்கள் முயன்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கரூரில் ஒரு கோவிலில் திருமணம் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினர் நம்மை பிரித்துவிடுவார்களோ என அஞ்சி வீட்டிற்கு வந்து விஷம் அருந்தியுள்ளனர்.
பின்பு அவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் அஜித் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிவரஞ்சினி உயிருக்கு போராடி வருகின்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.