கிளிநொச்சியில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தால் கோரப்பட்டால் அது தொடர்பான நடவடிக்கைக்கு தம்மை தொடர்பு கொள்ளுமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்வி பதிலில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார்
அவை பின்வருமாறு
கேள்வி-கிளிநொச்சி ஏ9 வீதியில் இதுவரை நடத்தி வந்த வர்த்தக நிலையங்களை குத்தகை அடிப்படைக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றதே. அது பற்றித் தெரியுமா?
பதில்-கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிளிநொச்சி பிரதான வீதியில் வியாபார நிலையங்கள் வைத்துள்ள காணி உரிமையாளர்கள் சிலர் என்னைச் சந்தித்தனர்.
1990களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட, (இன்னும் அளிப்புப் பத்திரங்கள் கொடுக்கப்படாத) கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அமைந்துள்ள காணிகளில் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் முன்னர் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ்ப் பெற்றுக் கொண்ட காணிகளின் ஏ9 வீதிப் பகுதியை குத்தகைக்குக் கொடுத்தால் மிகுதிக் காணிகளுக்கு அளிப்புப் பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக அறிவித்தார்கள்.
மேற்படி விடயம் தொடர்பாக கரைச்சிப் பிரதேச செயலாளரிடமும் வடக்கு மாகாண காணி ஆணையாளரிடமும் தொலைபேசியூடாக கதைத்திருந்தோம். அதன் அடிப்படையில் குறித்த நடவடிக்கையை நிறுத்தி, காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நிரந்தரமாக அந்தக் காணிகளை உரிமையாளர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக, இந்த நடவடிக்கைக்கு எதிராக மேன் முறையீடு ஒன்று காணி உரிமையாளர்களின் ஒப்பந்தத்துடன் வடமாகாண காணி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்விடயத்தில் வேறு யாருக்காவது உதவி தேவைப்படின் எனது அலுவலகத்துடன் தொடர்புகொண்டால் அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்களை வழங்கமுடியும். எமது தொலைபேசி இலக்கம்: 021 221 4295 என அவர் தெரிவித்தார்.