திருகோணமலை குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட நடுஊற்று கிராம சேவகர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்..அஜித் தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி இந்த ஆறு பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
கிண்ணியா நடுஊற்று கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு குடும்பஸ்தர், வெளிநாடு செல்லுவதற்காக கொழும்பில் பிசிஆர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது முதன்நிலை தொடர்பாளர்களை அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, மேலும் 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த மகாமாறு அலிகார் மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு இன்று (18) தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்த அவர், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இலங்கையில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த, 2 வது கொரோனா அலைக்குப் பின்னர் இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.