பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் மாநகராட்சி இணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர் மஞ்சுநாத் பிரசாத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெங்களூரில் பரவியுள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானது. இது வேகமாக பரவக்கூடியது.
அதனால் இத்தகைய வைரஸ்கள் பெங்களூரில் பரவுவதை தடுக்க அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். கேரளா, மராட்டியத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் பெங்களூரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயற்பட வேண்டும்.
3ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதற்காக பொதுமக்கள் தங்களின் பெயர்களை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
பெங்களூரில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களை கண்டறியும் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
அதாவது சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை உடையவர்களை கண்டறிந்து தடுப்பூசி வழங்கப்படும். வீடு,வீடாக சென்று விவரங்கள் சேகரிக்கப்படும்.
மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா பரவுவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நிலை உண்டாகும்”என அவர் குறிப்பிட்டுள்ளார்.