கிளிநொச்சியில், கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தாய்மார்கள் கண்ணீர் மல்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்டு தொடர்ந்து போராடி வருகின்ற தாய்மார்களுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில், உள்நாட்டில் நீதியை இனியும் எதிர்பார்க்க முடியாது எனவும் சர்வதேசமாவது நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நலையில், இம்முறை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், தங்களது விவகாரம் தொடர்பாக உரிய தீர்வு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் வகையில் தீச்சட்டி ஏந்தி இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, தாய்மார்கள் பலர் போராட்ட இடத்திலேயே தனது குழந்தைகளை இழந்து படும்வேதனையைக் கூறி, கதறி அழுத காட்சிகள் பார்ப்போர் மனதை உலுக்கியதுடன் சில தாய்மார் போராட்ட இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.