சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத குழுவொன்றின் தீர்மானத்தை ஏற்க முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவையும் அவர் நிராகரித்தார்.
கட்டுவபிட்டிய தேவாலயத்திற்கு முன்னாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு முன்னால் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாறு ஆய்வு செய்ய அமைச்சர் குழுவை நியமித்திருப்பது, உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில பாதகமான பரிந்துரைகளை மறைப்பதற்கான முயற்சி எனவும் அவர் தனது சந்தேகத்தை வெளியிட்டார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நியமித்தார். மற்றய உறுப்பினர்களாக அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்கா மற்றும் ரோஹிதா அபேகுணவர்தன ஆகியோர் அடங்குவர்.
எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தொடர்புடைய அறிக்கைகளைப் படித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“இந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஐந்து உயர்ந்த அறிவார்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டது. எனினும் சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத குழுவைப் பற்றி முடிவு செய்ய நாங்கள் எவ்வாறு அனுமதிக்க முடியும்” என்று கர்தினால் கேள்வி எழுப்பினார்.