ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக ஆதரவளிக்குமாறு இலங்கை விடுத்த அவசர கோரிக்கைக்கு இந்தியா இன்னும் முறையாக பதிலளிக்கவில்லை என இலங்கை அரசாஙங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜெனிவா தொடர்பில் இலங்கை, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சிறப்பு கோரிக்கை கடிதத்தை அனுப்பியதாக தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் யு.என்.எச்.ஆர்.சி அமர்வில் இலங்கை இந்தியாவின் ஆதரவைக் கோரியுள்ளதாக அவர் கூறினார்.
எனினும், இந்த கோரிக்கைக்கு இந்தியா இன்னும் முறையாக பதிலளிக்கவில்லை என்று கொலம்பேஜ் கூறினார்.
அண்மைய நாட்களில் சில சம்பவங்கள் நடந்த போதிலும், இந்தியா சாதகமான பதிலை அளிக்கும் என்று இலங்கை நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானத்தை முன்வைக்க இலங்கை தொடர்பான கோர் குழு விரும்புகிறது.
ஆசிய நாடுகள் மற்றும் பிற நாடுகளின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை ஆதரவு கோரி வருகிறது.
எனினும், கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்வகிக்க இந்தியா மற்றும் ஜப்பானை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு இலங்கை முடிவு செய்ததை அடுத்து இந்தியாவுடனான இலங்கையின் உறவு சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.