இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையை பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியின் அரசியல்வாதி நேஸ்பி பிரபு கண்டித்துள்ளார்.
இந்த அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தியாகத்தை காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கான எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை என்று நேஸ்பி பிரபு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் – ஆண், பெண் மற்றும் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்து மிகவும் கொடூரமான போர்க்குற்றம் புரிந்துள்ளமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துள்ளது.
போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் 60 வீதமான உறுப்பினர்கள் சிறுவர்களாவர் என்றும் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போர்க்குற்றம் புரிந்தவரான அடேல் பாலசிங்கத்தை விசாரிக்க பிரித்தானியா முயற்சிக்கவில்லை என்றும் நேஸ்பி பிரபு குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க முறைக்கான சிறிய முன்னேற்றம் கூட ஐக்கிய நாடுகளின் ஆணையாளரால் விமர்சனம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் உலக தொற்றுநோய்க்கு நடுவில் எந்தவொரு பிரச்சினையிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை எவ்வாறான அதிக முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறது என்பதை தம்மால் ஊகிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முன்னாள் இராணுவ வீரர்கள் பொதுச்சேவைகளில் ஈடுபடுத்தப்படுவதை மனித உரிமைகள் ஆணையாளர் கண்டித்துள்ளார்.
எனினும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், முன்னாள் இராணுவ வீரர்களின் அனுபவமும் அர்ப்பணிப்பும் பிரதமர் எட்லீ மற்றும் சேர்ச்சில் ஆகியோரால் நன்கு பயன்படுத்தப்பட்டது என்பதை தாம் நினைவுப்படுத்த விரும்புவதாக நேஸ்பி பிரபு குறிப்பிட்டுள்ளார்.