ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் இலங்கை தொடர்பிலான விவகாரங்களில் பாதுகாப்பு பேரவையின் உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கண்டி – குண்டசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல,
உள்நாட்டு விவகாரங்களை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையே உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாங்கள் 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் பல நாடுகளுடன் பேசசுவார்த்தை நடத்தி சில விடங்களைச் செய்தோம்.
பாதுகாப்புச் சபையில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவு எமக்கு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு காணப்படுகின்றது.
உள்நாட்டு விவகாரங்களை உள்நாட்டிலேயே செய்துகொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை முன்னிலையில் இருக்கின்ற நாடுகள் வலியுறுத்தி வந்துள்ளன.
துரதிர்ஷ்டவசமாக 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் ஊடாக நாட்டுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதிலிருந்து மீண்டுவர முயற்சிக்கின்றோம்.
60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு ஒன்று காணப்படுகின்றது.
இது தொடர்பில் பிரித்தானியாவின் நேஸ்பி பிரபு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, அந்நாட்டு உள்விவகார அமைச்சிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஆகவே எம்முடன் நட்புறவைப் பேணும் நாடுகளுடன் இணைந்து உண்மை மற்றும் யதார்த்தத்தை செயற்படுத்துவதற்கு முன்நிற்கின்றோம்.
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.