ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, நாடாளுமன்றுக்கு அழைப்பிப்பது குறித்து சட்ட ஆலோசனை பெறவேண்டியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து ஆசனத்திற்கு தலைமைத் தாங்கிய அவர், சட்ட ஆலோசனைக் கிடைக்கப் பெறும்வரை அவர் நாடாளுமன்றுக்கு அனுமதிக்கப்படமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நீதிமன்றினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றுக்கு அழைப்பித்தமை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.
ஆனால், நான் அவரை உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப்பிரமானம் செய்துகொள்ளும்போது நாடாளுமன்றுக்கு வருகைத் தர அனுமதியளிக்கவில்லை. இரண்டாது அமர்விலும் அவருக்கான அனுமதியை நாம் வழங்கவில்லை.
அவரது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தை நாடுமாறு நாம் வலியுறுத்தினோம். இவ்வாறான சட்ட ஏற்பாடுகளை அடுத்தே நாம் அவருக்கு சபைக்கு வருகைத் தர அனுமதியளித்திருந்தோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, உயர்நீதிமன்றமே குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய, தற்போதைய சட்டத்தில் இடமில்லை.
உயர்நீதிமன்றத்தைவிட அதிகாரம் மிக்க நீதிமன்றமும் நாட்டில் இல்லை. இந்த விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசனையை பெற்றே ஆகவேண்டும்.
நீதிமன்றில் முன்வைக்கப்பட வேண்டிய தர்க்கத்தை நாடாளுமன்றில் முன்வைத்து பயனில்லை. எவ்வாறாயினும், உரிய சட்ட ஆலோசனைகள் கிடைக்கப் பெறும்வரை, அவர் ஒருபோதும் நாடாளுமன்றுக்கு அனுமதியளிக்கப்படமாட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.