தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஐந்து மடங்கு கடன் வாங்கி ஆட்சி நடத்திய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் – முதல்வர் பழனிசாமிக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இடைக்கால வரவு செலவு கூட்டத்தொடர் புறக்கணிக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “ 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் – தொடர் வருவாய்ப் பற்றாக்குறை நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும் மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு – ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தமிழக மக்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி விட்டார்கள்.
2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே! ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 இலட்சம் கோடி!
இது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும்இஷ நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்கின்றன.
2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம்? கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா!
தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும், தன்னை முன்னிறுத்திக் கொள்ளவும் – தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் – உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.