பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பலதரப்பட்ட தமிழ் உணர்வாளர்களாலும், தமிழ் அரசியற் பிரமுகர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கு, ஆயுதமேந்திய இலங்கை விசேட அதிரடிப்படையினரால் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் வீதித் தடைகள் விதிக்கப்பட்ட போதும் பேரணி சவால்களை கடந்து வெற்றிகரமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றது.
இப்பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பேரணிக்கு வலுச்சேர்த்து வருவதாக கூறப்படுகிறது.
நீதிக்கான இந்த நடைபேரணி வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் தமிழர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை எதிர்ப்பதற்காகவும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழரின் இணைந்த வேண்டுகோளை முன்னிலைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறையீட்டில் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக செய்த போர்க்குற்றங்கள், மனிதஉரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நடைபேரணியின் மேலும் பல விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளன,
1) இந்து கோவில்களை அழித்த பின்னர் பெளத்த கோவில்களை நிறுவுவதன் மூலம் தமிழ் பகுதிகளில் நில அபகரிப்பு மற்றும் தமிழரின் பாரம்பரிய மற்றும் வரலாற்று இடங்களை சிங்கள பகுதிகளாக மாற்றுவது இடம்பெற்று வருகின்றது. தற்போது வரை சுமார் 200 இந்து கோவில்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளன.
2) கோவிட் -19காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்கள் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவும் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராகவும் தகனம் செய்யப்படுகின்றமை.
3) மலையகத்தில் உள்ள தமிழர்கள் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்காக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை.
4) யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளாகியும் தமிழ் பகுதிகளின் இராணுவமயமாக்கல் தொடர்கிறது.மேலும் சிங்களவர்களுக்கு ஆதரவாக மக்கள்தொகையை மாற்றும் நோக்கத்துடன் தமிழர்களின் வரலாற்று அடையாளம் பல்வேறு அரசு திணைக்களங்கள், குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி அழித்து வருகின்றனர். மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
5) தமிழ்ர் பகுதிகளில் வசிக்கும் கால்நடை உரிமையாளர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அங்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதுடன் அவர்களின் கால்நடைகளும் சூறையாடப்பட்டு வருகின்றன.
6) பல தமிழ் இளைஞர்களை 40 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்தன. இப்போது அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.
7) தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்களவர்களுக்கு அரசாங்கம் தவறாமல் மன்னிப்பு வழங்கியுள்ளது, ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படவில்லை.
8) காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது உறவினர்களை கண்டுபிடிக்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றன, ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு இதுவரையில் பதிலளிக்கவில்லை
9) தமிழர்களுக்கு இறுதிப்போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளனர், இது நினைவு நிகழ்வுகளை மறுப்பதன் மூலமும், இறந்தவர்களின் கல்லறைகளை அழிப்பதன் மூலமும், நினைவுச் சின்னங்களை இடிப்பதன் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
10) இந்த விடயங்களை வெளிப்படுத்தும் தமிழ் ஊடகவியலாளர்களையும், இந்த விடயங்களை எதிர்க்கும் தமிழ் சிவில் சமூக ஆர்வலர்களையும் அரசாங்கம் குறிவைத்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன், அச்சுறுத்தலையும் விடுத்து வருகின்றது.
11) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு தமிழரின் இணைந்த முறையீட்டை அமுல்படுத்துதல், இதில் இலங்கையை போர்க்குற்றங்கள், மனிதஉரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையால் பரிந்துரைக்கப் பட வேண்டும் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.



















