யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட மீனவ சம்மேளன பிரதிநிதியான வர்ணகுலசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்திலுள்ள தீவகங்களில் 3 தீவுகளை வெளிநாடுகளுக்கு மின்சார வசதிகள் செய்வதற்காக வழங்குவது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அது எந்த நிறுவனமாக இருந்தாலும், சீனாவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி அவர்களுக்கு வழங்குவதை யாழ் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளாக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஏனெனில் சீனாவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி அங்கே வந்து ஆதிக்கத்தை செலுத்துவார்கள் எங்களுடைய மீனவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவார்கள். இந்தியாவிடம் வழங்கினாலும் அதுவும் நமக்கு பாதகமாகவே இருக்கும் அவர்கள் வந்து இங்கே ஆதிக்கம் செலுத்தும் போது அது இன்னும் பாதகமானதாகவே அமையும்.
இப்போதே இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காரணமாக அவர்கள் வந்து இங்கு சண்டித்தனம் விட்டு தொழில் செய்கின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே அவர்கள் இந்த தீவுகளில் குடிகொண்டால் அது இன்னும் பாதகமாகவே அமையும்.
எனவே இந்த தீவகங்களை ஒருபோதும் வெளிநாடுகளுக்கு வழங்கும் தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ சமூக பிரதிநிதியான அ.அன்னராசா,
யாழ் மாவட்டத்தின் தீவகங்களை சீன நிறுவனத்திடம் மின் உற்பத்திக்காக வழங்குகின்ற செயல்ப்பாட்டை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
எனவே எங்களுடைய பிரதேசத்திலே நாங்கள் சுதந்திரமாக தொழிலை செய்து நிம்மதியாக வாழக்கூடிய வகையில் வேறு நாடுகளுக்கு தீவுகளை வழங்குகின்ற செயல்பாட்டை தடுத்து நிறுத்தி இதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.