வருகிற மே மாதத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஜனாதிபதியாக பொறுப்பேற்று, முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார் ஜோ பைடன்.
ஏற்கனவே பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், 3-வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திட்டமிட்டதைவிட தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருவதால் வருகிற மே மாதத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மே மாத இறுதிக்குள் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கையில் உள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி பைடன்,
நாடு முழுவதும் அதிகமான பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதிக்குள் அனைத்து கல்வியாளர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.




















