கொரோனா தடுப்பூசியைப் பெறுபவர்கள் வெயிலில் செல்லக்கூடாது, குளிக்கக்கூடாது, மது, புகைபிடித்தல் கூடாது, உடற்பயிற்சியில் ஈடுபடலாகாது என்ற கருத்துக்ககை தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர நிராகரித்துள்ளார்.
இத்தடுப்பூசிக்கும் இக்கூற்றுக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. சிகரெட் மற்றும் மதுசாரத்துக்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பில்லை.
ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு உகப்பானவை அல்ல. இவற்றின் பாவனை இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான காரணம் அல்ல.
என்றாலும் சிகரெட், மது பாவனையாளர்களும் இத்தடுப்பூசியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்கள் மத்தியில் அறிகுறிகள் வெளிப்படாத நோய்கள் அதிகமாகக் காணப்படும். அதனால் அவர்கள் இத்தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தலும் அதிகம்.
அதன் விளைவாக உயிராபத்து அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்க நேரிடும். இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம். என்றார்.
மேலும் தடுப்பு மருந்தொன்றைப் பெற்றால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி ஏற்படும். அதுவே இங்கும் இடம்பெறுகின்றது.
இதன் விளைவாக உடல் வலி, காய்ச்சல் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் குளிப்பது தவறான காரியம் அல்ல.
ஆனால் காய்ச்சல் இருக்கும் போது நாம் எவரையும் குளிக்கச் சொல்ல மாட்டோம். விரும்பிய உணவை உண்ணலாம். பருகலாம் என்றார்.