பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நயவஞ்சக போக்கினை கடைப்பிடித்துள்ளார் என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜெனிவா கூட்டத்தொடரில் சில நாடுகளினால் வரைபு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தெரிவாகினர். அந்த வகையில் இவர்கள் சொல்வதைதான் உலகம் ஏற்கும்.
தற்போது அந்த வரைபிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் உடன்பட்டுள்ளார். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் ஒரு பச்சதுரோகத்தையும் நயவஞ்சகத்தையும் கூட்டமைப்பின் தலைவர் செய்துள்ளார்.
தமிழ் மக்களாகிய நாங்கள் இனிமேலும் விழிக்காதுவிட்டால் எங்கள் தமிழ் மக்களை காப்பாற்றுவது கேள்விக்குறியாவிடும்.
இனியாவது தமிழ் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும். உண்மையான தலைவராகவும் நேர்மையான தலைவராகவும் யார் உள்ளார் என்பதை நாம் அறிய வேண்டும்.
இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை குழிதோண்டி புதைக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கை இருந்தது.
இதனால்தான் 2010 ஆண்டளவில் அதில் இருந்து விலகி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் தமிழ் தேசிய அரசியலை தக்க வைத்து வந்துள்ளோம்” என தெரிவித்தார்.