மாகாணசபைக்கான அதிகாரங்களை முழுமையாக நீக்கிய புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்றால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் எனத் தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்தியுள்ள நிலையிலும், தேர்தலை நடத்துவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலும் மாகாணசபை தேர்தல் குறித்து அரசுக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் தேர்தல் குறித்து இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிக்கையில்,
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா அல்லது கைவிடப்பட வேண்டிய ஒன்றா என்பது குறித்து முதலில் ஆழமாக ஆராய்ந்து, சகல தரப்புடனும் பேச்சுகளை முன்னெடுத்து அதன் பின்னர் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாகும்.
மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அதற்கான செலவுகள், அவ்வாறு அதிகளவு பணத்தை விரயம் செய்வதால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.
இலங்கைக்கு மாகாணசபை முறைமை அவசியமில்லை என்பதே எனது கருத்தாகும். எனது இதே நிலைப்பாட்டில் அரசில் பலர் உள்ளனர்.
எனினும், அரசாக தீர்மானம் எடுக்கையில் தனித்தீர்மானம் எடுக்காது சகலரும் இணைந்து பேச்சுகளின் மூலமாக தீர்மானிக்க வேண்டும்.
மாகாணசபை முறைமை என்பது ஒரு சிலரின் அதிகார மோகத்துக்காக வேறு நாடுகளின் தலையீட்டில் எமக்குத் திணிக்கப்பட்டதாகும். நாமாக விரும்பி இதனைப் பெற்றுக்கொள்ளவில்லை.
எமது அரசமைப்பில் எமக்குப் பிடிக்காத ஒரு விடயத்தை உள்நுழைத்து கொண்டு இத்தனை காலமாகக் கொண்டு செல்கின்றோம். எனவே, இனியும் எமக்கு இவ்வாறான அநாவசிய சரத்துக்கள் அவசியமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்போது எமது நாட்டுக்குப் புதிய அரசமைப்பு ஒன்றே அவசியப்படுகின்றது. எனவே, புதிய அரசமைப்பின் பின்னர் தேர்தல் குறித்து சிந்திக்க வேண்டும். இப்போதுள்ள முறைமைக்கு அமைய அதிகாரங்களுடன் கூடிய மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடாது.
முதலில் புதிய அரசமைப்பை உருவாக்கி, மாகாண சபைக்கான அதிகாரங்களை நீக்கிவிட்டு தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் அரசில் இருந்து கொண்டே இந்த முறைமையை நாம் முழுமையாக எதிர்ப்போம் என கூறியுள்ளார்.


















