உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோருவதில் நாம் ஒருபோதும் மௌனிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதல்களை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி , 2010 ஆம் ஆண்டு வரை சஹ்ரான் உள்ளிட்ட தௌஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினால் ஊதியம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் என்பவையும் எதிர்வரும் அரசாங்கத்தின் மூலமாவது வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது. எனினும் அதில் பல முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்புக்களின் தலைவர்கள் அவர்களின் உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை. அவ்வாறிருக்கையில் சஹ்ரான் எவ்வாறு பிரதான சூத்திரதாரியாக இருப்பார் ?
எனவே கடந்த 2010 ஆம் ஆண்டு வரை சஹ்ரான் உள்ளிட்ட தௌஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு ஊதியம் வழங்கியமை , 2007 இல் கிழக்கில் காத்தான்குடி பிரதேசத்தில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட ரி -56 ரக துப்பாக்கிகள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீள பெறப்படாமை , உயிர்த்த ஞாயிறு தாக்குதலன்று தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தாக்குதல்களை மேற்கொள்ளவிருந்த தாக்குதல்தாரி தெஹிவளைக்குச் சென்று குண்டை வெடிக்கச் செய்ய முன்னர் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியொருவரை சந்தித்ததாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் சாட்சி வழங்கியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் பல விடயங்களை மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் அரசாங்கமேனும் இதன் உண்மையான பின்னணியை கண்டறிய வேண்டும்.
தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி , இவ்வாறான உண்மைகளும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான நியாயத்தை கோருவதில் நாம் ஒருபோதும் மௌனிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.