இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலவுகையில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்ற பொய்யான நிலைப்பாட்டை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்றையதினம் கொழும்பில் ஏற்பாடுசெய்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம் இருக்கும் போது, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்ற நிலைப்பாட்டை உருவாக்கி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்த மக்களிடம் சுரண்டிய ஹோட்டல் உரிமையாளர்கள், சோளத்தை விதைக்க நிலத்தை கொள்ளையிட்டவர்கள், அன்டிஜன் இறக்குமதி செய்து, கொரோனாவில் சம்பாதித்தவர்கள் அரசாங்கம் கூறுவது போல் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
சீனி இறக்குமதியில் 15.9 பில்லியன் ரூபாவை கொள்ளையிட்டவர்கள் போன்றவர்களை அரசாங்கம் மக்களாக கருதி இருக்கலாம்.
இது மாத்திரமல்ல, இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தொடர்ந்தும், இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவர்களையும் அரசாங்கம் மக்களாக கருதி இருக்கலாம் என மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.