தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை சமர்ப்பித்ததோடு ஜனநாயக ரீதியான அரசாங்கம் என்றவகையில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடியே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை சபை முதல்வர் முன்வைத்தார்.
கடந்த வாரம் மாகாணசபைகள் தொடர்பான திருத்தச் சட்டமூலமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதற்குப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. .
இதில் எதற்கு முக்கியத்துவமளிப்பது? அமைச்சரவைத் தீர்மானத்துக்கா? அல்லது நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கா?” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபை அமைச்சருமான தினேஷ் குணவர்தன,
இதே கேள்வியை இறுதியாக நடைபெற்ற சபை அமர்வின்போதும் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பியிருந்தார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டிருந்தது.
தேர்தல் முறை, தேர்தல் சட்டம், தேர்தல் நடத்தப்படும் காலம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்படும். வாக்குறுதியளிக்கப்பட்டதுபோல அரசாங்கம் என்றவகையில் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம்.
இந்த மாற்றம் ஜனநாயக ரீதியான அரசாங்கம் என்றவகையில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடியே மேற்கொள்ளப்படும். என்றார். இதற்குப் பதிலளித்த லக்ஷமன் கிரியெல்ல,
20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும்போது எதிர்க்கட்சிகளுடன் ஒருபோதும் கலந்துரையாடவில்லை என்றார். இதற்கு பதிலளித்த தினேஷ்,
20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடவில்லை என்றால், எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் எப்படி, அதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்களென அமைச்சர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியதோடு, உங்களது கட்சியில் இருப்பவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியவில்லையே.
உங்கள் கட்சியில் உள்ளவர்கள் பலர் எங்களுடன் கலந்துரையாடினார்கள். எதிர்க்காலத்தில் அதிகமாக நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.