செவ்வாய் கிரகத்தில் வானவில் இருப்பது போன்ற சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
கடந்த மாதம் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA, வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் Perseverance ரோவரை தரையிறக்கியது.
அதன் மூலம் செவ்வாய் கிரகத்திலிருந்து தொடர்ந்து பல புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில், விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சிறிய ரக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கிய பெர்சிவரென்ஸ் ரோவர், அது வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியிருந்தது.
அந்த புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் வானவில் இருப்பது போன்ற ஒரு படம் இருந்த நிலையில் பரபரப்பாக பேசப்பட்டது.
பூமியில் இயற்கையாகவே மழை மற்றும் சூரிய ஒளி இப்பதால் வானவில் தோன்றக்கூடும், ஆனால் செவ்வாய் கிரகம் மிகவும் வறண்ட வளிமண்டலத்தைக் கொண்டது என்பதால் அங்கு எப்படி வானவில் இடம் பெற்றது என்ற பல சந்தேகங்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், அந்த புகைப்படத்தை விளக்கும் வகையில் சில விவரங்கள் வெளியாகியுள்ளன .
செவ்வாய் கிரகத்தில் மழை என்ற ஒன்று இல்லை என்பதால் நீர் துளிகள் கிடையாது, அதனால் அது ‘ரெயின்போ’வாக இருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால், வறண்ட கிரகமான செவ்வாயில் புழுதி இருக்கும் என்பதால், அது ‘Dustbow’வாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Dustbow என்பது நீர்துளிகளுக்கு பதிலாக அடர்ந்த தூசிகளின் மீது சூரியஒளி பட்டு உருவாகும் வானவில் ஆகும்.
இந்த வாதம் ஒருபுறம் இருக்க, அது வானவில்லாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறப்படுகிறது.
வானவில் போன்ற அந்த அரைவட்ட வடிவம், கமெராவின் லென்ஸ் விரிவடையம்போது ஒளிக் கதிர்கள் லென்ஸில் படுவதன் மூலம் ஏற்படும் பிம்பமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.