யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களில் கொவிட்-19 நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மீளத் திறக்க அனுமதிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் விடுத்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் முதல் திருநெல்வேலி பொதுச் சந்தை கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 14 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளையதினம் காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படாத உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.