பண்டிகை காலங்களில் பொது மக்களின் நடத்தை திருப்திகரமாக இல்லை. எனவே கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவோர் சட்டநடவடிக்கைகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி எஸ்.எம் ஆர்னோல்ட் எச்சரித்துள்ளார்.
பொது மக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், சட்ட விதிகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சகம் தயங்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
பண்டிகை காலங்களில் பலரின் பொறுப்பற்ற நடத்தை கவனிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருந்தாலும், சிலர் சுகாதார வழிகாட்டுதல்களை உரியமுறையில் பின்பற்றவில்லை.
சில நாடுகள் கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது மற்றும் நான்காவது அலைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், இலங்கையை பொறுத்தவரை இதுவரை வெற்றிகரமாக வைரஸைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
இருப்பினும், மக்களின் பொறுப்பற்ற நடத்தை தொடர்ந்தால் கொரோனா தொற்று விரைவாக பரவுவதை தவிர்க்க முடியாதது.
எனவே, நாட்டில் சாத்தியமான கொரோனா கொத்தணி – உருவாகாமல் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



















