வவுனியாவில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குச் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் வைத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கோவிட் தாக்கம் தொடர்பில் வவுனியாவின் தற்போதைய நிலை மற்றும் கோவிட் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது போன்ற விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாகச் சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உரிய திணைக்களங்கள் இறுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் விசேட வர்த்தமானிக்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கை உட்பட பிரத்தியோக வகுப்புக்களுக்குத் தடை, களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை, மங்களகரமான மற்றும் துக்ககரமான நிகழ்வுகளுக்கு 150 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன், இவைகள் அவ்விடத்தில் 50வீதமாக இருத்தல் வேண்டும் (மண்டபங்களின் இருக்கை எண்ணிக்கையில் 50வீதம்), உணவகங்களின் இருக்கைகள் 50வீதமாக மாற்றப்படுதல், நீச்சல் தடாகம் பூட்டு, சிறுவர் பூங்கா பூட்டு போன்ற பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களில் ஊழியர்கள் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் கை சுத்தம் செய்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் கட்டாயமாகும்.
மேலும் பொதுமக்களும் சீரான முறையில் முகக்கவசம் அணிவது அவசியமாகும். இவ்விடயங்களை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வவுனியா மாவட்டத்தில் தங்கியிருந்து பணியாற்றும் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்வதற்குச் சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் செல்ல முடியும் எனவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், இவ் நடைமுறைகள் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்குமெனவும் அரச அதிபர் சமன் பந்துல சேன தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் கோவிட் தடுப்பு செயலணியின் இணைப்பாளர் மேயர் யெனரல் மகேஸ்பண்டார, பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்தின, சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸார், வர்த்தகர் சங்கம், போக்குவரத்து தரப்பினர், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.