கடந்த வாரம் கத்தோலிக்க திருச்சபையின் யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே அது. கத்தோலிக்க திருச்சபையின் உயர்நிலைக் குருவானவர் ஒருவர் அவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியமானது.
அதுவும் மே பதினெட்டை நினைவு கூர்வதற்கு சில கிழமைகளுக்கு முன் அவர் அதைக் கூறியிருந்தார்.ஈஸ்டர் குண்டுவெடிப்பை நினைவு கூர்ந்த ஒரு காலகட்டத்தில் அவர் அதைக் கூறியிருந்தார்.எனவே அது கூறப்பட்ட காலம், கூறியது யார் என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அக்கூற்றுக்கு முக்கியத்துவம் உண்டு.
ஏனெனில் கடந்த ஆண்டும் நினைவு கூர்தலை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்தித்த பொழுது மத நிறுவனங்கள் போதிய அளவுக்கு ஒத்துழைக்கவில்லை. அதை வேறுவிதமாகச் சொன்னால் மத நிறுவனங்களையும் அரசியல் கட்சிகளையும் பொருத்தமான விதங்களில் கடந்த ஆண்டு ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும் சொல்லலாம் என மூத்த கட்டுரையாளர் நிலாந்தன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,
அவ்வாறு ஒருங்கிணைக்கப்படாத ஒரு பின்னணியில் தான் கடந்த ஆண்டு நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்த முடியவில்லை. இந்த ஆண்டும் தாயகத்தில் பெருந்தொற்று நோய் தீவிரமாகப் பரவிவரும் ஒரு பின்னணியில்,மக்கள் மயப்படாத ஒரு நினைவு கூர்தலுக்கான வாய்ப்புக்கள் அதிகமாகத் தெரிவதால் இக்கட்டுரை அது தொடர்பில் முன்கூட்டியே உரையாடலைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்படுகிறது.
முதலாவதாக நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தவேண்டும். இரண்டாவதாக அதை அனைத்துலக மயப்படுத்தவேண்டும். ஏனென்றால் அது எவ்வளளவுக்கு எவ்வளவு மக்கள் மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது கூட்டுத்துக்கத்தைக் கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும்.
அந்த அரசியல் ஆக்க சக்தி தான் தமிழ் மக்கள் தமது நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்தின் பிரதான உந்து விசையாக அமையும்.அதேபோல அது எவ்வளவுக்கு எவ்வளவு அனைத்துலக மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் மக்களுக்கான நீதியைப் பெறத் தேவையான அனைத்துலக அபிப்பிராயங்களை அது கனியவைக்கும். எனவே மே18ஐ ஆகக் கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்த வேண்டும்.
ஆகக்கூடிய பட்சம் அனைத்துலக மயப்படுத்த வேண்டும். அவ்வாறு மக்கள் மயப்படுத்துவது என்றால் அதை இப்போதிருக்கும் நிலைமையில் அதாவது கோவிட் பெருந் சுற்றுச்சூழலில் அதிலும் குறிப்பாகச் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்துக்கு தலைமை தாங்கும் ஒரு அரசாங்கமானது ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட முடியாத ஒரு நினைவு கூர்தலாக அதை மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றுவது என்றால் அதை ஆகக்கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் இப்போதிருக்கும் பெரும் தொற்றுச் சூழலில் மக்கள் பெருந்திரளாகக் கூடுவது கடினம். தனிமைப்படுத்தற் சட்டத்தின்படி அது சட்ட விரோதமானதாகவும் இருக்கும்.
இந்நிலையில் மக்களை அதிகம் ஓரிடத்தில் திரட்டாமல் எப்படி ஒரு நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தலாம்? அல்லது அதை எப்படி பெரும்பாலான தமிழ் வீடுகளுக்குள் கொண்டு போகலாம்? என்று சிந்திக்க வேண்டும்.அவ்வாறு சிந்தித்து நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தும் போதுதான் அது தடை செய்யப்பட முடியாத ஒரு நினைவு கூர்தலாக மாறும்.
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சில வீடுகளின் வெளி மதில்களில் மட்டும் சுட்டிகளை எரித்தால் அந்த வீடுகளை அரசாங்கம் இலகுவாக அடையாளம் காணும். அதனால் அந்த வீட்டுக்காரர்களுக்கு ஆபத்து உண்டாகலாம். மாறாக எல்லா வீடுகளிலும் சுட்டிகள் எரிந்தால் யாரைப் பிடிப்பது? யாரை விசாரிப்பது? இதுதான் மக்கள் மயப்பட்ட போராட்டங்களின் மகத்துவம்.
எல்லா வீடுகளிலும் வெளி மதில்களில் சுட்டிகள் ஏற்றப்பட்டால் எல்லாரையும் தூக்கிக் கொண்டு போய் அடைக்க முடியாது. தனித்தனியாகச் செய்யும் போதே பயம் இருக்கும் சமூகமாகச் செய்தால் பயமிருக்காது.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியைப் போல.எனவே தடை செய்யப்பட முடியாத ஒரு நினைவு கூர்தல் எனப்படுவது அது எந்தளவுக்கு மக்கள் மயப்படுகிறது என்பதில்தான் தங்கியிருக்கிறது.
இவ்வாறு நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தும்போது இப்போதிருக்கும் நிலைமைகளின்படி அதாவது முதலாவதாக பெருந்தொற்றுச் சூழல் இரண்டாவதாகச் சிங்கள-பௌத்த உணர்வுகளுக்குத் தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் மூன்றாவதாக ஒரு பொருத்தமான மக்கள் மயப்பட்ட பொதுக்கட்டமைப்பு இல்லாத வெற்றிடம்.இவற்றின் பின்னணியில் அவ்வாறு நினைவு கூர்தலை மக்கள் மையப்படுத்துவது என்று சொன்னால் அதற்கு ஏற்கனவே நிறுவனமயப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளையும் மத நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உண்டு.கடந்த ஆண்டும் இவ்வாறு சிந்திக்கப்பட்டது.எனினும் அது வெற்றி பெறவில்லை.
குறிப்பாக யாழ். சர்வமதப் பேரவையால் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.குறிப்பிட்ட நாளில் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் ஆலயங்களில் மணிகளை ஒலிக்கச் செய்வது என்று கேட்கப்பட்டது. பெரும்பாலான மத நிறுவனங்கள் அதற்குச் சம்மதித்தன.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட கத்தோலிக்க குருமுதல்வர் அது தொடர்பில் ஒரு ஆலோசனையை முன்வைத்தார்.அதாவது பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் மாலை ஆறு மணிக்கு அடிக்கப்படும் திருந்தாதி மணியைச் சற்றுப் பிந்தி அடிக்கலாமா? என்று.ஆனால் எல்லா மத நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் பெரும்பாலான ஆலயங்களில் மணிகள் ஒலிக்கப்படவில்லை.மிகச் சில ஆலயங்களில்தான் சுட்டி விளக்குகள் ஏற்றப்பட்டன.
ஏன் இப்படி நடந்தது? ஏனெனில் மத நிறுவனங்களைப் பொருத்தமான விதங்களில் ஒருங்கிணைக்க ஒரு கட்டமைப்பு அப்போது இருக்கவில்லை. இப்பொழுதும் இல்லைதான். இவ்வாறான ஒரு பின்னணியில் மேற்படி குரு முதல்வரின் கோரிக்கையை ஒரு தொடக்கமாக எடுத்துக் கொண்டு தமிழ்த் தரப்பு எவ்வாறு மத நிறுவனங்களை ஒருங்கிணைக்கலாம் என்று சிந்திக்கலாம். இது விடயத்தில் ஆறு மணிக்குப்பின் அதாவது ஊர் ஓரளவுக்கு அடங்கத் தொடங்கும் பொழுது மணிகளை ஒலிப்பதும் சுடர்களை ஏற்றுவதும் பொருத்தமாக இருக்கும்.
ஆறு மணிக்கு ஊர் அடங்காது.அப்பொழுது வேலை முடிந்து வீடு திரும்பும் வாகனங்களின் இரைச்சல் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டதொரு நேரத்தில் மணிகளை ஒலித்தால் அவை துலக்கமாகக் கேட்காது. அதேபோல செக்கல் பொழுதில் சுடரை ஏற்றினாலும் அது துலக்கமாக ஒளிராது.
எனவே இருளத் தொடங்கியபின் அதாவது ஏறக்குறைய ஏழு மணி அளவில் வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்து குறைந்து விடும். அன்றாட வாழ்வின் பகல் நேர இரைச்சல்களும் அடங்கிவிடும். ஊர் ஓரளவுக்கு அடங்கத்தொடங்கும்.அந்தவேளையில் மணிகளை ஒலித்தால் இரவின் அமைதியில் அவை சன்னமாகக் கேட்கும்.
அந்த இருளில் சுடர்களை ஏற்றினால் அது துலக்கமாகாத் தெரியும்.எனவே இது தொடர்பில் அப்படி ஒரு நேரத்தைத் தெரிவு செய்து சுடர்களை ஏற்றலாம்;மணிகளை ஒலிக்கக் கேட்கலாம்.அவ்வாறு எல்லா ஆலயங்களிலும் மணிகள் ஒலிக்க விடப்பட்டால் அது தமிழ் கூட்டு உளவியலை ஒரு பண்பாட்டுத் தளத்தில் பொது உணர்ச்சிப்புள்ளியில் இணைக்கும். இது முதலாவது.
இரண்டாவது இவ்வாறு ஒரு பொது உளவியலைக் கட்டியெழுப்பும் விடயத்தில் ஏற்கனவே நிறுவன மயப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பைப் பெறலாம்.அரசியல் கட்சிகள் தமது கிராம மட்டக் கிளை அமைப்புகள் ஊடாக அதை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று முயற்சிக்கலாம். கிராமங்களில் மணிகளை ஒலிக்கச் செய்வதிலும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறலாம்.
குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் துணிந்து முன்வந்து தங்கள் அலுவலகங்களிலும் வீடுகளிலும் வெளிப்படையாகத் துணிச்சலாக முன்னுதாரணமாகச் சுடர்களை ஏற்ற வேண்டும். அப்பொழுது தான் அது ஒரு துணிச்சலான முன்னுதாரணமாக இருக்கும்.
அத்துணிச்சலான முன்னுதாரணத்தைப் பின்பற்றி மக்களும் தங்கள் வீடுகளில் சுடர்களை ஏற்றத் துணிவார்கள்.மிகக் குறிப்பாக நினைவு கூர்தலின் விளைவுகளை தமக்கு வாக்குகளாக மடைமாற்றம் செய்ய முயலும் அரசியல்வாதிகளுக்கு இதில் கூடுதல் பொறுப்பு உண்டு.
தலைவர்கள் ரிஸ்க் எடுத்தால்தான் மக்களும் ரிஸ்க் எடுப்பார்கள்.எனவே தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை இதில் முழு அளவிற்குக் கேட்கவேண்டும். நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்த அவர்களுடைய ஒத்துழைப்பு இன்றியமையாதது.தமிழரசியலில் இப்போதுள்ள நிலைமைகளின்படி எந்த ஒரு அரசியற் செயற்பாட்டையும் மக்கள் மயப்படுத்துவதென்றால் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்.
பல்கலைக்கழகங்கள் இப்பொழுது முழு அளவுக்கு இயங்குவதில்லை. எனவே இது விடயத்தில் மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அடிப்படையான பௌதீக வரையறைகள் உண்டு.அது கடந்த ஆண்டும் உணரப்பட்டது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் இப்போதிருக்கும் சூழலில் நினைவுகூர்தலை மக்கள் மயபடுத்துவதற்கு அரசியல் கட்சிகளும் மத நிறுவனங்களும்தான் ஆகக் கூடிய பட்சம் உதவ முடியும்.
அவ்வாறு நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்தும்போது அங்கே கூட்டுத்துக்கத்தை ஆகக் கூடிய பட்சம் கூட்டு ஆவேசமாக மாற்றலாம். நினைவு கூர்தல் எனப்படுவது துக்கத்தை அழுது கடக்கும் ஒரு நிகழ்வு மட்டும் அல்ல. மாறாக அது ஓர் உணர்ச்சிப் புள்ளியில் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுகிறது.
தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்பது ஒரு மையமான இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை ஒன்று திரட்டுவது மட்டுமல்ல.அதற்குமப்பால், நினைவு கூர்தலை பெரும்பாலான தமிழ் வீடுகளை நோக்கி எப்படி விரிவுபடுத்தலாம்; மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திப்பதே.
கார்த்திகை விளக்கீட்டைத் தமிழ் மக்கள் எப்படி அனுஷ்டிக்கிறார்களோ அதுபோல சித்ரா பவுர்ணமி,ஆடி அமாவாசை போன்ற விரத நாட்களை எப்படி அனுஷ்டிக்கிறார்களோ அதுபோல கத்தோலிக்கர்கள் தமது அனைத்து மரித்தோருக்குமான நாளை எப்படி அனுஷ்டிக்கிறார்களோ அதுபோல நினைவு கூர்தலையும் ஆகக் கூடிய பட்சம் தமிழ் வீடுகளை நோக்கி மக்கள் மயப்படுத்த வேண்டும்.
ஒரு சடங்காக அல்ல. ஒரு வாழ்க்கை முறையாக.தமிழ்த் தேசிய அரசியலில் பிரிக்கப்படாத ஒரு பகுதியாக அதை மாற்றவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அது மக்கள் மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது மக்களால் தன்னியல்பாக,தன்னார்வமாக,எந்த நிர்ப்பந்தமும் இன்றி பயிலப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது ஒரு மக்கள் மயப்பட்ட நினைவு கூர்தலாக அமையும்.அவ்வாறு மக்கள் மயப்பட்ட ஒரு நினைவு கூர்தல் தான் கூட்டுத் துக்கத்தைக் கூட்டு அரசியல் ஆக்கசக்தியாக மாற்றும். அந்த அரசியல் ஆக்க சக்திதான் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தின் பிரதான உந்து விசையாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.