திருகோணமலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்ந்த ஏனைய விற்பனை நிலையங்களை மூடுமாறு நகரசபை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இவ்வறிவுறுத்தலை திருகோணமலை நகரசபை நேற்று (02) ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
கொவிட் தடுப்பு செயலணி மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்பொழுது திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வெளியூரிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகளவிலான மக்கள் வருகை தருவதாகவும் இதனூடாக தொற்று அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்து கடைகளையும் மூடி ஒத்துழைப்பு வழங்குமாறும் திருகோணமலை நகரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.