கோவிட் -19 வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்ற அறிவியல் ரீதியான முடிவு எட்டப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எச்சில் மற்றும் சுவாசம் மூலம் மாத்திரமே தொற்று பரவும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாகவும் அந்த அமைப்பின் தென் கிழக்காசிய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி மருத்துவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், சுகாதார வழிக்காட்டல்களை தொடர்ந்தும் பின்பற்றி பாதுகாக்க வேண்டியது பொது மக்களின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் – 19 வைரஸ் காற்றின் மூலம் பரவும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
எனினும் கோவிட் -19 வைரஸ் காற்றின் மூலம் பரவாது என இரசாயன ஆய்வுக் கூட அறிவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பட்டிருந்தார்.
மேலும், காற்றோட்டம் குறைந்த அறைகள், குளிரூட்டப்பட்ட அறைகளில் கோவிட் பரவும் என மருத்துவ கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.